- பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு – உயரதிகாரிகள்வந்து உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே கலைவோம் என்று கூறி அங்கிருந்து ஊர்வலமாக சென்று மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு
பேட்டி. சம்பத் – போராட்டக்குழு தலைவர் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பட்டுக்கோட்டை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகர் – கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் எல்.சி 94 ரயில்வேகேட் பாதை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாதையை அண்ணாநகர், கொண்டப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு காரைக்குடி – மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகளுக்காக ரயில்வே துறையால்
எல்.சி.94 ரயில்வே கேட் பாதை மூடப்பட்டது. இதனால் கடந்த 12 வருடங்களுக்குமேல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் ரயில்வேதுறை சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அதற்காக ரூபாய் 2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல முறை அரசுக்கும், ரயில்வே துறைக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென ஒன்று திரண்டு இன்று தங்களது ரேஷன் கார்டுகளுடன் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே மெயின் ரோட்டில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்து உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை கைவிட மறுத்து அந்த பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்படத் தொடங்கினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் போலீசாரின் தடுப்புகளையும் மீறி அங்கிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு தெற்கு காளியம்மன் கோயில் சாலையில்
சீனிபன்னீர்செல்வம் ஆர்ச் அருகில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார், போலீஸ் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை அமைதிக் கூட்டம் நடத்தி உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமார்
உறுதியளித்தார்.
அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கொண்டப்பநாயக்கன் பாளையம் ரோட்டில் இருபுறமும் நகராட்சி கழிவு நீர் வாய்க்கால் 4 அடி அகலம் போக, பாக்கி உள்ள ரோட்டின் அகலம் சுமார் 18 அடி தான் உள்ளது. இந்த சாலையில் இரண்டு பள்ளிகள் மற்றும் நகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருக்கும் அவர்களது சொந்த குடியிருப்பு வீடுகள் உள்ளது. குறிப்பாக சுமார் 20 லட்சம் செலவில் நகராட்சியால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் அரசு சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், ரேஷன்கடையும் உள்ளது. இந்த சுரங்கப்பாதை அமையும்பட்சத்தில் மேற்கூறிய அனைத்துமே பாதை எடுப்பதற்காக முற்றிலும் அகற்றப்படும் சூழல் ஏற்படும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில்
சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பி இரண்டு மற்றும் சக்கர வாகனங்கள், சைக்கிள்கூட செல்ல முடியாமல் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே சுரங்கப்பாதை எங்களுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக யாருக்கும் பாதிப்பு இல்லாத அளவிற்கு அந்த இடத்தில் ரயில்வே கேட் ஒன்று அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் எங்களுக்கு ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.