தமிழக பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை – ராமதாஸ்

3 Min Read
ராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கான 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், சாதிவாரி கணக்கெடுப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்கும் அளவுக்கு தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த புதிய நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலை அளிக்கிறது. 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை உரை முழுவதும் தெளிந்த நீரோடையாக இருந்தது. திருக்குறளில் தொடங்கி புறநானூறு வரை ஏராளமான மேற்கொள்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இவை அனைத்தும் இல்லாத உடலுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலன்களாக, யாருக்கும் பயனில்லாதவையாக மாறிவிட்டன.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே சமூகநீதி, கடைக்கோடி தமிழர் நலன் உள்ளிட்ட 7 இலக்குகளை அடிப்படையாக வைத்தே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் சமூகநீதியைக் காக்க அடிப்படை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். ஆனால், நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என்ற பழைய பல்லவி தான் பாடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் எந்த வகையிலும் சமூகநீதி மலராது என்பதே உண்மை. மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களை 25 மொழிகளில் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு, 8 இடங்களில் அகழாய்வுகள் போன்ற தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டு பிடிப்பதற்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்வழிக் கல்விக்கும், தமிழை கட்டாயப்பாடமாக்குவதற்கும் எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இவற்றை செய்து என்ன பயன்?

காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம், பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிப்பு, மூன்றாம் பாலினத்தவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்றல், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், 5000 நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைப்பது ஆகியவை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டிய சில திட்டங்கள் ஆகும். அதேநேரத்தில், புதிய பாசனத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, ஓகனேக்கல் இரண்டாம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை, தருமபுரி உபரி நீர் திட்டம் அறிவிக்கப்படவில்லை, அரியலூர் சோழர் பாசனத் திட்டம் அறிவிக்கப்படவில்லை, தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்படவில்லை, கல்விக்கடன் ரத்து குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்பன போன்ற ஏராளமான இல்லாமைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைந்திருக்கின்றன.

மகளிர்நலன் காக்கும் சமத்துவப் பாதை என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மகளிர் நலன் காப்பதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான். ஆனால், நடப்பாண்டில் ஒரு மதுக்கடையைக் கூட மூடுவதற்கான அறிவிப்புகள் இல்லை. மாறாக, நடப்பாண்டில் ரூ.50,000 கோடியாக உள்ள மதுவணிகத்தின் மூலமான வருவாயை ரூ.55,000 கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இது எந்த வகையிலும் மகளிர் நலனைக் காக்காது; குடும்பங்களை சீரழிக்கும். திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இத்தகையதாக உள்ள நிலையில், தமிழகத்தின் நிதிநிலை மிகவும்மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் 1.81 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தின் சொந்த வரி வருவாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ரூ.1.70 லட்சம் கோடியாக குறைந்து விட்டது.

வரும் ஆண்டில் நிலையை சமாளிக்க ரூ.1.55 லட்சம் கோடி கடன் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. மொத்தத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போதாவது புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review