தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு வாக்கு பதிவு நடந்தது.
இந்நிலையில் இன்று 7-ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி மற்றும் சர்வே நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆளும் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின.
தற்போது பாஜக கூட்டணி தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி டைம்ஸ் நவ் மற்றும் – இ.டி.ஜி நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 386 தொகுதிகளிலும், INDI கூட்டணி 118 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 359 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 154 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க – தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது… எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு?
NDTV கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 371 தொகுதிகளையும், I.N.D.I.A கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நியூஸ் எக்ஸ், இந்தியா நியூஸ் செய்தி நிறுவனங்களும் இதே இடங்களை குறிப்பிட்டுள்ளன.
ஜன் கி பாத் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 362 முதல் 392 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 141 முதல் 161 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்ற பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.