போலி ரசீதுகளை சமர்ப்பித்து ₹44,000 கோடி ஜி.எஸ்.டி மோசடி..!

2 Min Read

இந்தியாவில் செயல்படாத 29,273 நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து, ஜி.எஸ்.டி வரிப்பலனாக 44,000 கோடி ரூபாய் வரிப்பலன் பெற்று மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஜி.எஸ்.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அதிக நிறுவனங்கள் மோசடி செய்ததில் மகாராஷ்டிராவுக்கு முதலிடம் உள்ளதாக அவர்கள் கூறினர்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததில் இருந்து, இன்புட் வரி கிரெடிட் (உள்ளீட்டு வரி வரவு) மூலம் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ரசீதுகளை சமர்ப்பித்து இன்புட் வரியை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பொருள் அல்லது சேவைக்கு ஒரு முறை மட்டுமே வரி செலுத்துவதை இது உறுதி செய்கிறது.

அதிக நிறுவனங்கள் மோசடி செய்ததில் மகாராஷ்டிரா முதலிடம்

ஆனால், பொருட்களை சப்ளை செய்ததாக போலி ரசீதுகளை சமர்ப்பித்து இன்புட் வரியைப் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் வரையிலான 8 மாதங்களில், செயல்படாத 29,273 போலி நிறுவனங்கள் மூலம் பொய்யான ரசீதுகளைச் சமர்ப்பித்து மொத்தம் 44,015 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என ஜி.எஸ்.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜி.எஸ்.டி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- போலியாக நிறுவனங்களை பதிவு செய்து ஜி.எஸ்.டி இன்புட் வரி கிரெடிட் பெற்று மோசடி செய்யும் நிறுவனங்களைக் கண்டறிய கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் செயல்படாத 29,273 போலி நிறுவனங்கள் மூலம் பொய்யான ரசீதுகளைச் சமர்ப்பித்து மொத்தம் 44,015 கோடி ரூபாய் இன்புட் வரி கிரெடிட் பலனை பெற்று மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

₹44,000 கோடி ஜிஎஸ்டி மோசடி

கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் மட்டும் 4,153 போலி நிறுவனங்கள் மூலம் 12,036 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 926 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான் (507), டெல்லி (483), அரியானா (424) உள்ளன. போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலாண்டில் 4,646 கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாகியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் 1,317 கோடி ரூபாய் தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 926 போலி நிறுவனங்கள் மூலம் 2,201 ரூபாய் கோடி மோசடி நடந்துள்ளது. 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல், டெல்லியில் 483 போலி நிறுவனங்கள் மூலம் 3,028 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களை பொறுத்தவரை ஆந்திராவில் 19 நிறுவனங்கள் மூலம் 765 கோடி ரூபாய், அரியானாவில் 424 நிறுவனங்கள் மூலம் 624 கோடி ரூபாய், உத்தரபிரதேசத்தில் 443 நிறுவனங்கள் மூலம் 1,645 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply