மாநிலச் சாலைகள் தரமானதாக அமைய வேண்டும்எனவும், வெறும் அறிவுரையோடு நிற்க மாட்டேன் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பெரிய பாதிப்புகள் இன்றி மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நிலை குறித்து எனக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலச் சாலைகள் தரமானதாக அமைய வேண்டும். வெறும் அறிவுரையோடு நிற்க மாட்டேன். சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் இனி இது தொடர்பாகக் கள ஆய்வு மேற்கொள்வேன்.
அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். உரிய திட்டமிடுதலின் துணையோடு பருவமழைக் காலத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதங்கள் ஏற்படுவதையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்போம்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.