சிவகங்கை மாவட்டம், அருகே காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் யூ டியூப்பில் மாந்திரீகம் தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார்.

அப்போது ஒரு யூடியூப் சேனலில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணன் என்ற சாமியாரின் வீடியோக்களை பார்த்துள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோயிலுக்கு சென்று மாந்திரீக முறையில் தனது கணவன் மற்றும் மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

பரிகாரங்கள் செய்ய முன் பணமாக ரூ10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பணத்தை கட்டிய சில நாட்களுக்கு பின் பரிகாரம் செய்வதற்கு அதிக செலவாகும் எனவும், ரூ1.50 லட்சம் கொடுத்தால் தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் எனவும், சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்தும் எந்த பூஜைகளையும் செய்யாமல் சாமியார் தாமதித்து வந்த நிலையில் பணத்தை திருப்பி தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சாமியார் தெரிவித்த நிலையில், வீட்டுக்கு சென்றதும் வீட்டு கதவுகளை மூடி விட்டு அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் சாமியாரின் கோயில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.