கடனுக்கு பணம் கொடுக்க மறுத்த இளைஞர் வெட்டிக்கொலை

2 Min Read
படுகொலை செய்யப்பட்டவர்

விழுப்புரத்தில் வாலிபரை வீச்சரிவாளால் வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் கொடுப்பவர்
விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (30). இவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீராம், தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தான் வைத்திருந்த வீச்சரிவாளால் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

- Advertisement -
Ad imageAd image
கொலை செய்யப்பட்டவர்


இதில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம், அதே இடத்தில் சாய்ந்தார். வலியால் அலறி துடித்த அவரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீராமை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.


ஸ்ரீராம் பல நாட்களாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 19-ந் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் சென்று ரூ.2 ஆயிரம் கடனாக தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, எந்த வேலையும் பார்க்காமல் ஊதாரித்தனமாக சுற்றிவரும் உனக்கு பணம் கொடுத்தால் எனக்கு எப்படி வட்டியுடன் தருவாய் என்றுகூறி பணம் இல்லை என்று ஸ்ரீராம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பாலாஜி மீது நகர போலீசில் ஸ்ரீராம் புகார் கொடுத்துள்ளார்.

ஸ்ரீராம்


இதனால் ஸ்ரீராம் மீது பாலாஜிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீராம் உயிரோடு இருக்கக்கூடாது என்று கருதி அவரை கொலை செய்ய பாலாஜி திட்டம் தீட்டியுள்ளார். இந்த சூழலில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராம் தனியாக செல்வதை நோட்டமிட்ட பாலாஜி, ஸ்ரீராமை வழிமறித்து, தான் வைத்திருந்த வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்தம் சொட்ட, சொட்ட சாய்ந்த ஸ்ரீராம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
மேற்கண்ட தகவல் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு தலைமறைவாக இருக்கும் பாலாஜியை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீராமுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

Share This Article

Leave a Reply