சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நடந்த கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார் என்பதற்காக தி.மு.க.-பாஜக பாஜக .ஜனதா இடையே ரகசிய உறவு என கூறுவது ஏற்புடையது அல்ல.
இந்த விழா வெளிப்படையாக தானே நடந்தது. இதில், என்ன ரகசியம் உள்ளது. இது, அரசு விழா. அரசியல் விழா அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு விழாவாக மத்திய, மாநில அரசு இணைந்து நடத்தும் போது அதை அரசியல் விழாவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது, விவாதமாக்கக் கூடாது. இதுபோன்ற ஆரோக்கியமான சூழல் வர வேண்டும்.
கருணாநிதியை, ராஜ்நாத்சிங் புகழ்ந்து பேசினார் என்பதற்காக அக்கட்சியின் கொள்கை, அரசியல் ஈடுபாடுகளோடு நாங்கள் ஒத்துப்போகிறோம் என கருத வேண்டியது இல்லை.
மோடியை ‘கோ பேக்’ என சொன்னவர்கள் வரவேற்க வேண்டியது வரும் என்பது தான் இன்றைய அரசியல் சூழ்நிலை. பிரதமர் வந்தால் முதல்-அமைச்சர் நேரில் சென்று வரவேற்க வேண்டும். கவர்னர் தேநீர் விருந்து கொடுத்தால் அதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்.

இதனை அரசு அழைப்பாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியல் அழைப்பாக பார்க்கக்கூடாது. இதை அன்பு உணர்ச்சியாக பார்க்க வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியாக பார்க்கக்கூடாது.
கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் முதல்-அமைச்சர் பங்கேற்று இணக்கமான சூழலை ஏற்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு, நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்று முதல்-அமைச்சரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பெருந்தன்மையோடு பங்கேற்று இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.-பா.ஜனதா இடையேயான இந்த இணக்கம் கூட்டணியாக மாறுமா? இதை கூட்டணிக்கான அச்சாரமாக எடுத்துக்கொள்ளலாமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அவ்வாறு கூற முடியாது’ என பதில் அளித்தார்.
மேலும், ‘அரசு விழாவில் இரு எதிரெதிர் கட்சி கலந்து கொண்டது என்பதற்காக கூட்டணி என சொல்ல முடியாது. கூட்டணி கணக்குகள் என்பது அரசியல் நிகழ்வுகளை பார்த்து தேர்தல் வியூகங்களை அமைக்கும் போது சொல்வது. இப்போதைக்கு அதைப்பற்றி சொல்லமுடியாது’ என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.