இராணிப்பேட்டை வேதி ஆலை விபத்தில் பணியாளர் படுகாயம் தொடர்பாக நிறுவனம் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ் -3 என்ற வேதிப்பொருள் ஆலையில் வேதிப்பொருள் கொள்கலனை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
இந்த விபத்துக்கும், பிரவீண் குமாருக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் நிர்வாகத்தின் அலட்சியமும், போதுமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும் தான் காரணமாகும்.

விபத்தால் முடங்கிப் போன தொழிலாளி இனி வாழ்வாதாரம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வேதி ஆலை நிறுவனம் எந்த உதவியும் செய்யவில்லை. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.