மகளிர் இடஒதுக்கீடு மசோதா மகளிரை ஏமாற்றும் அரசியல் – பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

3 Min Read

மகளிர் மசோதா 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பா.ஜ.க., அதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது ஏமாற்றுகிற அரசியல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
கே.எஸ்.அழகிரி

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஆணாதிக்க சமுதாயத்தில் 25 ஆண்டு அரசியல் பயணம் மேற்கொண்டு மகத்தான சாதனைகளை படைத்த அன்னை சோனியா காந்தி நாளை மாலை நடைபெற இருக்கிற தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாட்டில் பேருரையாற்ற அழைக்கப்பட்டதையொட்டி இன்று இரவு சென்னை மாநகருக்கு வருகை புரிகிறார். அவரோடு அன்னை இந்திராவின் மறுவடிவமாக இருக்கிற பிரியங்கா காந்தி வருகை புரிந்து உரையாற்ற இருக்கிறார்.

இதன்மூலம் மகளிர் மாநாடு மிகப்பெரிய எழுச்சியோடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை ஏற்கிறார். அமரர் ராஜிவ்காந்தி மறைவிற்குப் பிறகு அரசியலை முற்றிலும் துறந்திருந்த சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவதற்கு தலைமையேற்க வாருங்கள் என்று மூத்த தலைவர்கள் அழைத்ததை ஏற்று தலைமைப் பொறுப்புக்கு வந்து 19 ஆண்டுகாலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி சாதனைகளை புரிந்தவர்.

மோடி

6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியை அகற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்தவர். மீண்டும் 2009 தேர்தலில் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். மன்மோகன்சிங் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் 2019 மார்ச் 9 அன்று மாநிலங்களவையில் அறுதிப் பெரும்பான்மை குறைவாக இருந்தாலும் பெண்களுக்கு மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்தத்தை பிரதமர் மன்மோகன்சிங் மூலம் முன்மொழிய காரணமாக இருந்தவர் சோனியா காந்தி.

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்று மகளிர் மசோதா நிறைவேற ஆட்சியை பணயம் வைத்து துணிச்சலான முடிவு எடுத்தவர். அன்று நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பா.ஜ.க., அதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிற மசோதா தலைவர் ராகுல்காந்தி கூறியபடி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இதுதான் பா.ஜ.க. மகளிரை ஏமாற்றுகிற அரசியலுக்கு உரிய சான்றாகும். சோனியா காந்தியை பொறுத்தவரை தி.மு. கழக தலைவர் கலைஞர் அவர்களோடும், மு.க. ஸ்டாலின் சரியான புரிதல் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் மகத்தான ஆட்சி மாற்றங்கள் அமைய பெரும் துணைபுரிந்தது.

கே.எஸ்.அழகிரி

அத்தகைய சூழலில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று கலைஞர் அவர்களால் தியாகத் திருவிளக்கே என்று அழைக்கப்பட்ட அன்னை சோனியா காந்தி அவர்களும், இன்றைக்கு வகுப்புவாத சக்திகளை எதிர்த்து முறியடித்து, மோடியின் ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல்காந்தி இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுகிற பிரியங்கா காந்தி இன்று இரவு 10 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகை புரிகிறார்கள். அதற்கு பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு அவர் தங்கியிருக்கிற சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்து புறப்பட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகை புரிகிறார்.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கும், மகளிர் மாநாட்டிற்கு வருகை புரிகிற அண்ணா சாலையின் இருபுறங்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும் எழுச்சியோடு, பெருந்திரளாக பங்கேற்று அன்னை சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களை தாங்கிக் கொண்டு எழுச்சிமிக்க வரவேற்பை நன்றிப் பெருக்கோடு அளித்திடுமாறு காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply