விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
செய்யாறு நகரில் ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது
எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.