முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோவிலில் ரூ.73.76 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதில்முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தொன்மையான கோவில்களை புனரமைத்தல், கோவில் சொத்துக்களை பாதுகாத்தல், நிர்வாக பயன்பாட்டிற்கான அலுவலகங்களை ஏற்படுத்துதல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரவாயல், மார்கசகாய ஈஸ்வரர் கோவிலில் ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம், மடப்பள்ளி மற்றும் பேவர் பிளாக் தரைத்தளம் ஆகியவை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டும், கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து கண்டறியப்பட்டு அதனை பாதுகாத்திடும் வகையில் ரூ.73.76 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,360 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நில மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு இதுவரை ரூ.5,594 கோடி மதிப்பிலான 6,180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கபாலீஸ்வரர் கோவில் முன்புறம் நேற்றைய முன்தினம் இரவு தனிநபர் ஒருவர் காகித துண்டுகளை தீயிட்டு எரித்த காட்சியானது கோவில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கோவில் வெளியில் நடந்திருந்தாலும் கோவிலின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே போல திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் அம்மனின் நகையை உதவி அர்ச்சகர் திருடி, அதை அடகு கடையில் அடமானம் வைத்திருந்தார்.
அந்த நகையை கோவில் நிர்வாகம் மீட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட உதவி அர்ச்சகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல் ஆட்சியானது சட்டத்தின்படி நடக்கின்ற ஆட்சி என்பதால் தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.