சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு அதிக பங்கு என்ற முழக்கத்துடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. கர்நாடகம், பிகார், ஒதிஷா ஆகிய மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் நிலையில் ஆறாவது மாநிலமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முன்வந்திருக்கிறது. ஜார்க்கண்ட் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

வடக்கில் பிகாரில் வீசத்தொடங்கிய சமூக நீதித் தென்றல் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சமூகநீதிக் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தெற்கில் கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சமூகநீதிக் காற்று வீசினாலும் தமிழ்நாட்டில் சமூகநீதி வறட்சி தான் நிலவுகிறது. அதற்கான காரணம், சமூகநிதி வழங்க ஆட்சியாளர்களின் மனங்களில் இடம் இல்லை என்பது தான்.
இன்றைய நிதிநிலை அறிக்கையின் 7 கனவுகளில் முதலாவது கனவு சமூகநீதி என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? அல்லது அது கனவாகவே தொடருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.