தஞ்சாவூர் : ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சை, பாபநாசம் , திருவையாறு உள்பட 8 சட்டமன்றத் தொகுதி வாரியாக வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் செயல்பட வேண்டியது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் ” முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உடல்நிலை சரியில்லாததால் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். ஒரணியில் திரண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டால் தான் வரும் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க முடியும். ஆனால் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கிறார் .
ஏனென்றால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்களோ என அவர் பயந்து தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். தன்னிடம் இரட்டை இலை சின்னம், கட்சி, பணப்பலம் உள்ளது என்ற அதிகாரப் போக்கில் அவர் செயல்பட்டு வருவது அ.தி.மு.க.வை மேலும் பலவீனமாக்கி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போட்டியிட்ட 10 தேர்தல்களில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. வருகின்ற 2026 தேர்தலிலும் இவ்வாறு அவர் செய்தால் அதன் பின்னர் கட்சி மேலும் பலவீனமாகி போகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தற்போது செங்கோட்டையன் மனநிலையில் தான் அ.தி.மு.க.வின் பெரும்பாலான தொண்டர்கள் உள்ளனர். விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை வேண்டாம் என கூறும் தி.மு.க. அரசு மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஏன் இந்தியை வைத்துள்ளீர்கள் .
பேரறிஞர் அண்ணா தற்போது இருந்திருந்தால் காலத்தின் தன்மை கருதி மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். நான் பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல் என்ற புத்தகத்தை படித்தேன் . அதில் 20-4-1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில், “எங்களுடைய மொழியும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும். இந்திய கூட்டாட்சிக்குள் எங்கள் மாநிலத்திற்கு உரிய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதிமொழி தேவை.
தனி நாடாக பிரிந்தால்தான் இத்தகைய பாதுகாப்பு கிடைக்கும் என முதலில் நினைத்தோம். ஆனால் சீன படையெடுப்பிற்கு பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக செயல்படுவதின் அவசியத்தை உணர்ந்தோம். காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் ஒரு பொது தொடர்பு மொழி உருவாக வேண்டும். அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும். 14 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பேரறிஞர் அண்ணா தற்போதைய காலத்தில் இருந்திருந்தால் காலத்திற்கு ஏற்ப மும்மொழி கல்வி வேண்டுமென கண்டிப்பாக கூறி இருப்பார் .என்று தெரிவித்தார் .
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ” மூன்றாவது மொழியாக இந்தி தான் என நான் கூறவில்லை” , இருப்பினும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி பேசுவதால் மூன்றாவது மொழியாக இந்தி இருக்கலாம். அதில் தவறு ஏதும் கிடையாது, என செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்தார் .
Leave a Reply
You must be logged in to post a comment.