தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று சூளுரை எடுத்து மக்கள் நலன் காக்கவே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தாய், சிங்கநிகர் தலைவி, அம்மாவின் 76ஆவது பிறந்தநாளில் கழகத் தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை முழக்கத்தினை வெளியிட்டேன்.

இன்றைக்கு இந்திய நாடு இருக்கின்ற சூழலில், மாநில உரிமைகள் குறித்து மக்களவையில் உரத்த குரலில் முழங்கி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் இருந்து கழகத்தின் சார்பிலும், கழக கூட்டணி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள், தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கொள்கைக் கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு, தமிழர்உரிமைமீட்ட அம்மாவின் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.