திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் ஆளுங்கட்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் மாநகர மேயர் மருதராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது;-

“தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் பிஜேபி ஆதரவு காரணமாக தான் நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி செய்தார் என ஓபிஎஸ் கூறியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார்.
தற்போது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். ஓ. பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓ. பன்னீர்செல்வமோ மற்றவர்களோ யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்குத் தான் எங்களது ஆதரவு என்றார்.
மத்தியில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உண்டா என்ற கேள்விக்கு, பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமா போய்விட்டது. தேர்தலில் மக்களை நம்பி அதிமுக உள்ளது. யாருக்கும் பயப்படும் கட்சி இல்லை என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.