விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல்வாதிகள், காவல்துறையினர் என்ன சதி செய்தாலும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ கூறினார்.
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மனிதம் காப்போம் மாநாடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று புதன்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், முனுசாமி, வேலுமணி, தங்கமணி, பென்ஞமின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இம்மாநாட்டையொட்டி புதிய வடிவிலான நாடாளுமன்ற கட்டிடம் போன்று பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று மாலை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது; தமிழகத்தில் ஜாதி ரீதியான வன்மங்கள், ஆணவ படுகொலைகள் நடக்கிறது. குடிநீரில் மனித மலத்தை கலைக்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனம் மாற்ற வேண்டும். மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும். இழந்த மானுடத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தான் மனிதன் காப்போம் என்ற மிக உயர்ந்த சொல்லோடு இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதற்கு பிறகாவது தமிழகத்தில் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது என்று நம்புகிறோம். போலீசார் எதை செய்தாலும் நாங்கள் வேடிக்கை பார்ப்போம் என நினைப்பது தவறாகும். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். எங்கள் மாநாட்டை சிதைக்க அரசியல்வாதிகள் போலீசார் எண்ணியுள்ளனர். இது மிகப் பெரிய பிரச்சனையில் முடியும் என நினைக்கிறோம். என்ன சதி செய்தாலும் இந்த மாநாட்டை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்.

வேங்கை வயல் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காத போலிஸ் அமைச்சர், அங்குள்ள மாவட்ட எஸ்.பி உளவுத்துறை போலீசார் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். இப்பிரச்சனை நடந்து ஓராண்டு காலமாகியும் இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதற்கெல்லாம் 2024 – 2026 ஆம் ஆண்டு தேர்தல் பதில் கூறும் இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் சிலம்பரசன், துணை பொதுசெயலாளர் தர்மன், செயலாளர் எட்மன் விழுப்புரம் மாவட்ட தலைவர் தமிழரசன், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் மனோகர், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் வக்கீல் பூவை ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.