திமுக இளைஞரணி சேலம் மாநாட்டில் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நெல்லையில் நடந்தது. அந்த மாநாட்டில் கடல் திரண்டு வந்தது போல் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று சேலத்திற்கு சுனாமி வந்து விட்டது போல் எண்ணும் அளவிற்கு இளைஞர் பட்டாளம் கூடியுள்ளது.
குறிப்பாக இதனை மறைந்த கலைஞர் பார்த்து இருந்தால் பேசவே தேவையில்லை, பார்த்து கொண்டிருந்தால் போதும் என சொல்லி இருப்பார். இயக்கத்தின் இருவண்ண கொடியை அதுவும் சேலத்து சிங்கம் வீரபாண்டியார் பெயரில் அமைக்கப்பட்ட கொடி மேடையில், நான் கொடி ஏற்றியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அண்ணா துவங்கிய இந்த இயக்கத்தில் கருப்பு, சிவப்பு இருக்கிறது. சமூக, அரசியல் பொருளாதாரத்தில் உள்ள இருண்ட நிலையை கருப்பு நிறமும், இதை மாற்றக்கூடிய சிவப்பு நிறமும் கொண்டதாக கட்சி கொடி அமைந்துள்ளது. உதயசூரியன் உதித்து இருட்டை விரட்டியடிக்கும்.

தளபதி ஆட்சியில் அண்ணாவின் கனவு, கலைஞரின் வழியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வடநாட்டில் இருக்கும் கருப்பு எனும் இருளை விரட்ட வேண்டிய கடமை, நமக்கு இருக்கிறது. அதனால் தான் இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்து தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிறார். வடக்கே ஒரு கோயில் திறப்பு விழா நடக்கிறது. ஏன் குடியரசு தலைவரை அழைக்கவில்லை என்று நாங்கள் கேட்கமாட்டோம்.
பிரதமர் இங்குள்ள தீர்த்தங்களுக்கு வந்துள்ளாரே என்றும் நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் ஒரு கோயிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்கக் கூடாது என இந்து சாஸ்திரம் கூறுகிறது. இது அறநிலையத்துறை அமைச்சருக்கு தெரியும். இந்து மதத்திற்கு நாங்கள் தான் சொந்தக்காரர் என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. கட்டி முடிக்கப்படாத கோயிலை திறக்க கூடாது என்கிறது இந்து மதம். அரசியல் லாபத்திற்காக இந்துக்களை மதிக்காமல் கோயிலை திறக்கிறார்கள். டிரஸ்ட் சார்பில் நடக்கும் விழாவிற்கு, இலவச ரயில் விடுகிறார்.

இதையெல்லாம் நாங்கள் கேள்வி கேட்கப் போவதில்லை கேட்டால் ஐஸ் வைப்பார்கள். ஐஸ் என்றால், இன்கம்டாக்ஸ், சிபிஐ, ஈடி. இதற்கு பயப்படுபவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் 40-க்கு 40 நிச்சயம் கிடைக்கும். இதேபோல் நாடு முழுவதும் வர வேண்டும். இந்த இளைஞர் பட்டாளம் வடஇந்தியாவிற்கு போனால் மாற்றம் வரும். அதை உங்களால் நிகழ்த்த முடியும். அந்த மாற்றத்தால் நாடாளுமன்ற தேர்தலை வென்று காட்டுவோம். இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.