தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய ஆவின் விற்பனை நிலையமாகும். இவ்வகையான பாலகம் அமைக்க குறைந்தபட்சம் 64 சதுர அடி முதல் 225 சதுர அடி வரையிலான இடம் மட்டுமே போதுமானது.

புதிய சில்லறை விற்பனை நிலைய பாலகம் அமைப்பதற்கு அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்றார்போல் சுமார் 1.50 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை முதலீடு தேவை. மேலும் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.30,000/- மட்டுமே வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
மக்கள் நடமாட்டமும் மற்றும் பாலகம் அமைக்கும் இடத்தை பொறுத்து மாதந்தோறும் சுமார் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம்.
பாலகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்கு முன்பே ஆவின் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விநியோகம் செய்யப்படும்.

ஆவின் நிறுவன பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை கமிஷன் வழங்கப்படும்.
இப்பாலகத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படலாம்.
எனவே ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், கூட்டாண்மை அலுவலகம், விற்பனை பிரிவு, நந்தனம், சென்னை-35 என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.