புதுச்சேரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி செலவில் முதலியார்பேட்டை பகுதியில் ராமனுஜர் நகர் முதல் வசந்த நகர் வழியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த வாய்க்காலை தூர்வாரும் பணியில் அரியலூர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8.45 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, மரப்பாலம் துணைமின் நிலையத்தின் 7 அடி மதில் சுவர் அப்படியே சரிந்து வாய்க்காலில் விழுந்தது.
இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டனர். பின்னர் உடனே அருகில் இருந்த பெண் தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 9 தொழிலாளர்களை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள், முதலியார்பேட்டை போலீசார் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த இரவான்குடியை மாதா கோயில் வீதியை சேர்ந்த பாக்கியராஜ் வயது (38) என்பவரை சடலமாக மீட்டனர்.

அதை தொடர்ந்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் வயது (30), அரியலூர் மாவட்டம் நெட்டலக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி வயது (65) ஆகியோர் அடுத்தடுத்து இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டனர்.

இதேபோல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இரவான்குடி கிராமத்தை சேர்ந்த கமல்ஹாசன், அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்போது மருத்துவமனையில் அரியலூர் மாவட்டம், இரவான்குடியை சேர்ந்த குணசேகரன், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த நகரப்பாடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்,

அரியலூர் மாவட்டம், நெட்டலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாசன், அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் (எ) ஜெயசங்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் தொழிலாளி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.