விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற மனைவி 20 அடி உயர மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பலியானார். சிகிச்சை பலனின்றி கணவனும் இறந்தார்.
கடலூர் மாவட்டம், அடுத்த விருத்தாசலம் அருகே சித்தேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (70). இவரது மனைவி வேம்பு (65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் இருவரும் திருமணம் ஆகி, சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

மகள் உள்ளூரிலேயே திருமணம் செய்து, கணவர் வீட்டில் உள்ளார். இந்த நிலையில், வேம்புக்கு கண் பார்வை பிரச்சனையால் நேற்று முன்தினம் சேலம் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
அதிகாலை சுமார் 5 மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்தவுடன் அந்த நேரத்தில் சித்தேரிக்குப்பத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் கணவருக்கு போன் செய்து என்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் காசிநாதன் தனது மொபட்டை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து இருவரும் சித்தேரிக்குப்பம் திரும்பினர். புதுக்குப்பம் மேம்பாலத்தின் மீது வந்த போது, எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் மொபட்டில் இருந்த வேம்பு சுமார் 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காசிநாதன் படுகாயமடைந்து மேம்பாலத்தின் மேலேயே ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசிநாதனும் இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.