கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ. 15 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ. 10 ஆயிரம்,, நகராட்சி தலைவர்களுக்கு ரூ. 15 ஆயிரம், நகராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், நகராட்சி உறுப்பினர்களுக்கு ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ரூ. 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் போல, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகளுக்கும் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படுவது அவசியமானது. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்களில் சரிபாதி பெண்கள் உள்ளனர்.
அதுபோல பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் கிராம ஊராட்சித் தலைவர்களாக உள்ளன. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட அவர்களில் பலர், தங்கள் குடும்பத் தேவைகளுக்காகவே சிரமப்பட கூடியவர்கள். தற்போது அவர்களுக்கு மதிப்பூதியம் மிகமிக குறைவாக உள்ளது. எனவே, கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.