விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. கடந்த 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்பு மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விக்கிரவாண்டி நகரப் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் 229-வது வாக்குச்சாவடியில் 1400 வாக்காளர்கள் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், வாக்கு பதிவு மையத்திற்குள் தேன்கூடு இருந்துள்ளது. இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் சில தேனீக்கள் அப்பகுதியில் உலாவர தொடங்கியதால் வாக்காளர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த தேன் கூட்டை உடனடியாக விரைந்து சென்று தேன் கூட்டை கலைத்தனர். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு செய்ய வந்த வாக்காளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.