விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்க்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் டெப்பாசிட்டை இழந்தார்கள். திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ் தான் இந்த மகத்தான வெற்றி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்றது.
திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. விக்கிரவாண்டியில் உள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்து 653 வாக்காளர்களையும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி,

அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தமது எழுச்சிமிகு பரப்புரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்,
நிறைவேற்றப்பட விருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலைகளை காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் 2 நாட்கள் தீவிர பிரசாரம் செய்தார்.
இது, வெற்றிக்கு காரணமாக அமைந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிடைத்த இந்த வெற்றி, வருகிற 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் இந்த வெற்றி பிரதிபலிக்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.