மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் விதம் குறித்து சென்னையில் இன்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் தலைமைச் செயலாளர் திரு. ககன் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டு ஆயூஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கி அவர்களை தரமான சிகிச்சைகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 12 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் எவ்வித சிக்கலுமின்றி தரமான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசினை சுகாதரத்துறை இணையமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.