தாய் தந்தை இல்லா ஆதரவற்ற நிலையில் இரு சகோதரிகள்- தொடர் மழையால் குடியிருந்த வீடும் இடிந்து விழுந்ததால் நிற்கதியாய் நிற்கும் அவலம்- உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒடுக்கண் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ வயது 18 மற்றும் ஸ்ரீநிவிகா வயது 16 என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மேனகா கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் செல்வராஜூம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பாஸ் ஆன ஜெயஸ்ரீ வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டார். தாய் தந்தை இறந்ததற்கு பின்பு எந்த வருமானமும் இல்லாமல் இருந்து வந்தனர்.

இதனால் குடியிருந்த வீட்டைத் தவிர எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த தொடர் கனமழையால் குடியிருந்த வீடும் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமானது. இதனால் ஜெயஸ்ரீயும், ஸ்ரீநிவிகாவும் செய்வது அறியாத திகைத்து ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையில் தனது அம்மாவை பெற்ற வயதான பாட்டி வயதான காலத்திலும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் நிலையிலும் தனது மகள் வழி பேத்திகள் எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கதியாய் நிற்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தப் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது கொண்டு போய் தங்க வைத்துள்ளார்.

ஜெயஸ்ரீயின் தங்கை ஸ்ரீநிவிகா படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஸ்ரீநிவிகாவை மட்டும் தற்போது பாட்டி படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் ஜெயஸ்ரீ அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். நாங்கள் இருவரும் தாய், தந்தை இழந்து வீட்டையும் இழந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பதால் எங்களது வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. வயதான காலத்தில் எனது பாட்டி மட்டுமே எங்களுக்கு தற்காலிகமாக உதவி செய்து வருகிறார். எங்களின் நிலை கருதி எனக்கு அரசு வேலை வழங்கியும் இடிந்த வீட்டை கட்டித் தரவும் வேண்டும் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.