பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்சுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் திருச்சி போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் பெலிக்சுக்கு வீடு, அலுவலகம் உள்ளது. இவரது சேனலில் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சங்கரின் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.

அதில் தான் பெண் காவலர்கள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சவுக்கு சங்கர் பேசினார். அதை ஊக்கப்படுத்துவது போன்ற பல கேள்விகளை பெலிக்ஸ் எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதை அடுத்து யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பெலிக்சை திருச்சி போலீசார் டெல்லியில் வைத்து கடந்த 11 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து, திருச்சி போலீசார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்சின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது போலீசாரிடம், வீட்டை சோதனையிடக்கூடாது என பெலிக்சின் மனைவி கடும் வாக்குவாதம் செய்தார்.
சோதனைக்கான நீதிமன்ற அனுமதியைக் காட்டி, பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இரவு வரை சோதனை நடந்தது. வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெலிக்சின் அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 பெண் காவலர்கள் உட்பட 6 போலீசார் ஏறினர். லிப்ட் திடீரென பழுதாகி பாதியில் நின்றது. பிறகு மெக்கானிக்கை அழைத்து வந்து லிப்டின் கதவுகளை திறந்து போலீசார் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.