மனைவியின் 25-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்ப் செட்டிங் செய்த போது மின்சாரம் பாய்ந்து தொழிலதிபர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). தொழிலதிபரான இவர், தனியாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்தார். அகஸ்டின் பாலுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்தி (25) என்பவரை திருமணம் செய்தார். மனைவி கீர்த்திக்கு நேற்று 25-வது பிறந்தநாள்.

மனைவியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட அகஸ்டின் பால் முடிவு செய்தார். திருமணம் நடந்து மனைவியின் முதல் பிறந்த நாள் என்பதால் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு வீடு முழுவதும் சீரியல் பல்ப் மற்றும் அலங்கார வேலைகள் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அப்போது சீரியல் பல்ப் செட்டிங் செய்யும் போது எதிர்பாராத விதமாக அகஸ்டின் பால் மீது மின்சாரம் பாய்ந்தது.

அதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்த நிலையில் மயக்கமடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது மனைவி கீர்த்தி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உரைந்தனர். பிறகு அகஸ்டின் பாலை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதை கேட்டு அவரது மனைவி கீர்த்தி மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதார்.

இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விரைந்து சென்று இளம் தொழிலதிபர் அகஸ்டின் பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்து 8 மாதத்தில் தொழிலதிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.