விழுப்புரத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் போக்குவரத்துக் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் அச்சத்துடன் பணியாற்றும் போலீசாரின் நிலையை மாற்ற விரைந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும், அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்காவல் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாத நிலையில் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே சிக்னல் அருகே மேற்கு காவல் நிலையத்தில் பகுதியில் ஒரு சிறிய அளவிலான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் மேற்கு காவல் நிலையத்துக்கு போக்குவரத்துக் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. சேதமடைந்த கட்டிடம் என்பதால் தான் புதியதாக மேற்கு காவல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டிய நிலையில் வேறு வழியில்லாமல் அங்கு போக்குவரத்து காவல் நிலையம் இடம் கிடைக்காததால் அந்த இடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது வெளியே கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடர் மழையில் கட்டிடத்தின் மேல் தளம் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டது தொடர்ந்து கட்டிடத்தின் மேல் தளப் பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லவேளை இரவு நேரம் என்பதால் போலீசார் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து எஸ்.பி நேரில் ஆய்வு செய்து உடனடியாக நகர காவல் நிலையத்தில் தற்காலிகமாக மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டது. சில நாட்களில் நிர்வாக பிரச்சனை காரணமாக திரும்பவும் காலாவதியான கட்டிடத்திலேயே போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வரும் நிலையில் சேதம் அடைந்த கட்டிடத்தில் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் பெரும்பாலும் சாலைகளில் தான் பணியாற்றும் நிலை இருந்தாலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் ஆவணங்கள் இன்றி செல்லும் வாகன ஓட்டிகள் இடம் விசாரிக்க காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தான் சரி பார்க்க வேண்டும். அதனால் சேதம் அடைந்த கட்டிடம் என்பதால் போலீசார் மட்டும் இன்றி வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பல ஆண்டுகளாக நிரந்தர கட்டிடம் இன்றி தற்காலிக சேதம் அடைந்த கட்டிடங்களில் செயல்பட்டு வரும் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்காலிக இடத்தை செயல்பட தகுதியான கட்டிடத்துக்கு மாற்றி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.