தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – மக்கள் நலப்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 13 ஆம் தேதி முதல் இருந்தே தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சூழலுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு நிர்வாகத்திலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அரசின் திட்டங்களை பெற விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதோடு, மக்கள் நலப் பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.