- ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கண்குளிர கண்டு களித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பிரணவ மந்திரத்தை மறந்ததால் பிரம்மனை இங்குதான் முருகக்கடவுள் சிறைவைத்தார் என தலவராலாறு கூறுகிறது.இவ்வளவு சிறப்புவாய்ந்த இக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6-ம் திருநாளான இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது. இதனை தொடர்ந்து முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.
இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன்முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து விநாயகர் உருவத்திலும் மாமரமாகவும் உருமாறிய சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார்.
நிறைவாக சூரபத்மனை வென்ற முருகப்பெருமானை சாந்தப்படுத்தும் விதமாக மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சூரசம்ஹார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.
சூரசம்ஹாரதின் வரலாறு : சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.இந்த போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/thanjavur-grace-surasamharam-was-celebrated-in-subramania-swamy-temple-with-arogaro-kosha/



Leave a Reply
You must be logged in to post a comment.