திருப்பூரில் மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்த விவகாரத்தில் 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அடுத்த மங்கலம் சாலை, பழக்குடோன் அருகே நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் இருவர் சந்தேகப்படும் வகையில் செல்போனில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த சென்ட்ரல் காவல் துறையினரைக் கண்டதும் இளைஞர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கோவை சிறுமுகையைச் சேர்ந்த லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் அதில் கஞ்கா போன்ற பொட்டலம் இருந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் கேட்டதும், “கஞ்சா வாங்க திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவைச் சேர்ந்த ராகுல் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு கே.வி.ஆர் நகரில் இருவரை சென்று பாருங்கள். அவர்கள் கஞ்சா தருவார்கள்” என கூறினார்.

அதனை நம்பி மங்கலம் நான்கு சாலையில் இருவரை சந்தித்தோம். 1 கிலோ கஞ்சாவிற்கு ரூ.33 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்றோம்.
பொட்டலத்தின் எடை அதிகமாக இருந்த காரணத்தால், சந்தேகமடைந்து திறந்து பார்த்த போது மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கொடுத்து கஞ்சா என விற்று மோசடி” செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் அளித்த தகவலின் அடிப்படையில் சாரதி (21), கவின் (22) என இருவரை காவல் துறையினர் பிடித்தனர்.
இருவரும் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா பொட்டலத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.