ஹரியானாவில் விஎச்பி ஆல் நடத்தப்படும் மதவாத வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹரியானாவில் நடந்த வகுப்புவாத மோதல்களில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கும் வன்முறை பரவி வருகிறது. யாத்ரா அமைப்பாளர்கள் ஆயுதங்களை ஏந்தி வந்தது எப்படி? என குருகிராம் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான ராவ் இந்தர்ஜித் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், VHP பேரணிகளில் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கும் மாநில காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், வலதுசாரி தீவிரவாத கும்பல்கள் பால்ராவில் உள்ள முஸ்லிம் கிராம மக்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
பெண்களைக் கூட குறிவைத்துத் தாக்கியுள்ளனர், காவல்துறையினர் அதைத் தடுக்காமல் மௌன சாட்சியாக நின்றுள்ளனர். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக காவல்துறை தானே முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என அக்டோபர் 21, 2022 அன்று உத்தரவிட்டும், ஒன்றிய அரசோ மாநில அரசுகளோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தத் தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஎச்பியின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் உடனடி விவாதத்தை நடத்துவது மிகவும் முக்கியமானது என அந்த கவன ஈர்ப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.