குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளை தொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுவே மூன்றாண்டு கால திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சிறந்த உதாரணம். சட்டம் ஒழுங்குகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய காவல்துறையோ, குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல, ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டுவருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காவல்துறையை இப்பொழுதாவது தட்டியெழுப்பி தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.