புதுடெல்லி: மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், பிரதமருக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தெரிவித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய், கடந்த 26-ம் தேதி வழங்கினார்.
இதன் மீதான விவாதம் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்த ராகுல் காந்திக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து, அவரை மீண்டும் எம்.பி-யாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார். 1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். “அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்” என குறிப்பிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், “கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.