இது இறை சொத்தை மீட்கிற ஆட்சி தானே தவிர, களமாடுவதற்கு உதவுகிற ஆட்சி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அவர் அளித்த பேட்டி; உயர் பொறுப்பில் இருக்கிற ஒருவர் குற்றச்சாட்டை கூறுகிறபோது ஆதாரப்பூர்வமாக கூறினால் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியில் 5500 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 1500 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது 8001 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை. கடத்தப்பட்ட சிலைகள், கலைப்பொருட்கள், உலோக திருமேனிகள் என 400 இனங்கள் இதுவரையில் மீட்டப்பட்டு இருக்கின்றன. உலோக திருமேனிகளை பாதுகாப்பதற்கு 162 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1843 பாதுகாப்பு அறைகள் கட்ட ஒப்புதல் அளித்து, 250 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தெய்வங்களையும், அவற்றுக்கான சொத்துக்களையும் பாதுகாக்கிறோம்.
எனவே இது இறைச்சொத்தை மீட்கிற ஆட்சி களவாடுவதற்கு உதவுகிற ஆட்சி இல்லை என்பதை மத்திய நிதி அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்த துறையின் 54 நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்றுள்ளார். கோவில்கள் சார்பில் நடக்கவுள்ள 1100 ஜோடிகளுக்கான இலவச திருமணங்களை நடத்தி வைக்க உள்ளார். முதல்வர் ஆன்மீகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களில் ஓட்டு ஒன்று கூட தங்கள் பக்கம் வராது என்பது புரிந்து கொண்டனர்.

அதனால் இது போன்ற அவதூறுகளை பரப்புகின்றனர். திருண்ணாமலை தீபத் திருவிழாவில், இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளுக்காக 14,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 16 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களும், 36 இடங்களில் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாரால் கோவிலுக்கு நன்மைகள் கிடைக்குமோ அவர்கள்தான் இந்த அரசு அறங்காவலர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் நியமித்துள்ளது.
இதுவரை 80க்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்கள் உள்ளிட்ட, 5000க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.