திருவண்ணாமலை-இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்.சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்றனர்

2 Min Read
டோலிகட்டி தூக்கிச் செல்கின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் எலந்தம்பட்டு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு ஆம்புலன்ஸ் மூலம் எலந்தம்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள படவேடு மலை அடிவாரம் வரை கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து எலந்தம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சாந்தியின் உடலை மலை அடிவாரத்திலேயே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து அவரது உறவினர்கள் சாந்தியின் உடலை மலை அடிவாரத்தில் நேற்று மாலை வரை வைத்திருந்தனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் எப்படி கொண்டு செல்வது என வேதனையுடன் அவர்கள் பரிதவித்தனர்.

பின்னர் அவரது உறவினர்கள் நீண்ட மர கட்டையில் டோலி அமைத்து சாந்தியின் உடலை எடுத்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

படவேடு மலை அடிவாரப் பகுதியில் இருந்து எலந்தப்பட்டு கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. எலந்தப்பட்டு பகுதியில் இருந்து போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை டோலி அமைத்து தூக்கிச் செல்கின்றனர்.

எனவே இதுகுறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு எலந்தம்பட்டு கிராமத்திற்கு மட்டுமின்றி சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேஸ்புக் பக்கத்தில்

சாலை வசதி இல்லாததால் தமிழகத்தில்
தொடர்ந்து நடைபெறும் அவலம். எங்கே செல்கிறது கிராம சாலைகள் அமைக்க மத்திய அரசு வழங்கும் நிதி?

ஜவ்வாதுமலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில், அவரது உடலை, சொந்த ஊருக்கு வாகனத்தில் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி, மலையடிவாரத்திலிருந்து தோளில் தூக்கிச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த தோளில் தூக்கிச் சென்ற வேதனையான செய்தி வந்து சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் அதே போன்ற நிகழ்வு அரங்கேறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

தமிழகத்தில், 250 க்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் கிராமங்களில் எல்லாம் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை என்பது, இது போன்ற துன்பகரமான நிகழ்வுகள் மூலமாகத் தெரிய வருகிறது. மத்திய அரசின் கிராம சாலை திட்டத்தில் ஒதுக்கப்படும் பெருமளவு நிதி எங்கே செல்கிறது?

தற்போதைய காலகட்டத்திலும், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள்அலைக்கழிக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக தமிழகத்தில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்றும், மரணத் தருவாயிலும் மக்களை இவ்வாறு அலைக்கழிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply