தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கம்பம் வனப்பகுதியில் விவசாயி ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. துப்பாக்கிச் சூட்டினை நியாயப்படுத்த விவசாயி ஈஸ்வரன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக எவ்வித ஆதாரமும் இன்றி வனத்துறையினர் கூறுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கடந்த 28-10-2023 சனிக்கிழமையன்று இரவு காவலுக்கு சென்ற நிலையில், அவர் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததாகவும், அவரைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் தற்காப்புக்காக ஈஸ்வரனைச் சுட்டுக் கொன்றதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.
ஆனால், கொல்லப்பட்ட விவசாயி ஈஸ்வரன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூடலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு உதவியாளராகச் செயல்பட்டு வந்தவர் எனும்போது, அவர் வன விலங்குகளை வேட்டையாடினார் என்பதும், வனத்துறையினரைத் தாக்க முயன்றார் என்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அப்படியே ஒருவேளை வனவிலங்கு வேட்டையில் விவசாயி ஈஸ்வரன் ஈடுபட்டதாக வைத்துக்கொண்டாலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆதாரங்களுடன் நிறுத்தி, சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கலாமே? அதனை விடுத்து, உயிரைக் கொல்லும் அளவிற்கு நெஞ்சில் சுட வேண்டிய அவசியம் வனத்துறையினருக்கு என்ன வந்தது என்பதுதான் பெருத்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனித உயிரை அநியாயமாகப் பறித்துவிட்டு, அதனை வனத்துறை அதிகாரிகள் நியாயப்படுத்த முயல்வது சிறிதும் மனச்சான்றற்ற செயலாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன், வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், கொல்லப்பட்ட விவசாயி ஈஸ்வரன் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.