நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். கடும் போட்டிகளுக்கு பிறகு மேயர் ஆனார் சரவணன். மொத்தம் 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியில் 49 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர்களே கவுன்சிலராக உள்ளனர். ஆளுங்கட்சி மெஜாரிட்டி உறுப்பினர்களை கொண்டிருப்பதால் எதிர்க்கட்சியின் தலையீடு இல்லாமல் மக்கள் பணிகள் முறையாக நடைபெறும் என நெல்லை மாநகர மக்கள் பெரிதும் எதிர்பாரத்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நெல்லை மாநகர திமுகவில் நடைபெறும் உள்கட்சி பூசல் காரணமாக மேயருக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
திமுக கோஷ்டி பூசலில் குறிப்பாக நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் மேயர் சரவணனுக்கு எதிராக மாமன்ற கூட்டங்களில் குரல் எழுப்ப வைத்தார். அதேபோல் மேயர் சரவணன் தனக்கு வேண்டிய சில திமுக நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி திட்ட பணிகளில் முறைகேடு செய்வதாகவும் புகார் எழுந்தது. பெரும்பாலான கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவர்களின் வாடுகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஒப்பந்ததாரர்களிடம் சதவீத அடிப்படையில் மேயர் கமிஷன் பெறுவதாகவும் அந்த கமிஷனை அனைத்து கவுன்சிலர்களுக்கும் சமமாக வழங்காமல் அவர் மட்டுமே வைத்துக் கொள்வதாகவும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆறாவது வார்டை சேர்ந்த கவுன்சிலர் பவுல்ராஜ் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசும்போது, அனைவருக்கும் கமிஷனை பகிர்ந்து அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் மேயரை மாற்ற நேரிடும் என்று எச்சரித்து பேசி இருந்தார் எனவே மேயர் சரவணன் உள்கட்சி பூசலை சமாளிப்பதற்கே பெரும்பாலான நேரங்களை செலவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், தமிழக அரசே எங்கள் நம்பிக்கைக்குரிய தமிழக முதல்வரே மாமன்ற உறுப்பினர்களால் மீண்டும் மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு கூறியும் 25 சதவீதம் கமிஷன் வாங்கி கல்லா நிரப்ப துடிக்கும் மேயர் மீது உடனடியாக நடவடிக்கை எடு. ஊழலால் முடங்கி கிடக்கும் மக்கள் பணிகளை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை எடு, ஊழல் இல்லாத மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஊழல் புகார் கூறி வரும் சூழலில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நம்பிக்குமார் என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.