- எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான அபராதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்து, சுமார் 20 கிமீ தூரத்துக்கு பரவியது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், தாவரங்கலிலும், மீன்படி படகுகள், வலைகள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேகரிக்கப்பட்ட எண்ணெய் கழிவுகள் அடிப்படையில், எண்ணெய் கசிவை ஏற்படுத்திய நிறுவனத்துக்கான அபராதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதன் விவரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.