தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16 ஆம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் துவங்கியது. ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானது. இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்று வரை தேர்தல் விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகள் காரணம் ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதியே நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததால் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தேர்தல் விதிகள் எப்போது நிறைவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இதுகுறித்து நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அளித்த பேட்டியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட பல்வேறு புகார்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்தன.
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக முடிந்தது. தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் முடிவுகளை குடியரசு தலைவரிடம் வழங்குவார். அதன்பின், மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை துவங்கும். தேர்தல் நடத்தை விதிகள், நாளை (ஜூன் 6) வரை அமலில் இருக்கும் என சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிவரையில் தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவடைகின்றன. இதை அடுத்து மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.