திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த வாணியம்பாடி அருகே உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுற்று சுவரை இடித்து தரைமட்டம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மதனாஞ்சேரி கிராமம், முருக்கன் குட்டை வட்டம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரகாசம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்திற்கு பின்புறம் செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோரின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன.
இதனால் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாததால் காலம் காலமாக பிரகாசம் நிலத்தின் வழியாக வரப்பு பாதை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோர் தங்களின் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல பிரகாசமிடம் இருக்கும் நிலத்தை வரப்பு பாதைக்கு பதிலாக கார் செல்லும் அளவுக்கு பொது வழி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வழி கொடுக்க பிரகாசம் மறுத்ததால் கார்த்தி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் உடன் 2 ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் 1 டிராக்டர் கொண்டு வந்து பிரகாசம் வசித்து வந்த வீட்டின் சுற்று சுவர் இடித்து தரைமட்டம் செய்தும், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரகாசம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் சுவர் இடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரகாசம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.