69 -வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்!

2 Min Read

டெல்லியில் நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2021-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளை பல்வேறு பிரிவுகளின் கீழ் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நேற்று (17.10.2023) வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், தகவல் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வா சந்திரா, நடுவர் குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வஹீதா ரஹ்மானை வாழ்த்தினார். மேலும் அவர் தனது கலைத் திறன் மற்றும் ஆளுமையால் திரைப்படத் துறையின் உச்சத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

தேசிய திரைப்பட விருது

தேசிய திரைப்பட விருதுகள் குறித்து பேசிய குடியரசுத்தலைவர், இந்த விருது வழங்கும் விழா இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதில் உள்ள ஒற்றுமையை சித்தரிக்கிறது என்றார்.

திரைத்துறையினரும், கலைஞர்களும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என்று கூறிய அவர், திரைத்துறையினர் தங்கள் திரைப்படங்கள் மூலம் இந்திய சமூகத்தின் மாறுபட்ட கலாச்சாரங்களை உயிரோட்டமாக சித்தரிக்கிறார்கள் என்று அவர் கூறினார். திரைப்படம் என்பது நமது சமூகத்தின் ஆவணம் என்றும், திரைத்துறையினரின் பணி மக்களை இணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது திரைத்துறையினர் உலகத் தரம் வாய்ந்த புதிய தரத்தை நிர்ணயிப்பார்கள் என்றும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் திரைப்படங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய திரைப்பட விருது

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்திய திரைப்படத் துறையின் பெருமைகளை எடுத்துரைத்தார். பிராந்திய உள்ளடக்கம் நன்றாக இருந்தால், அது உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்று அவர் கூறினார். வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளதற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

திரைப்பட திருட்டை தடுக்கும் முயற்சிகளில் அரசு திரைத்துறையினருக்கு துணை நிற்கிறது என்றும், ஒளிப்பதிவுச் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் ஏ.வி.ஜி.சி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், இது குறித்த ஒரு கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது என்று தெரிவித்தார்.

தேசிய திரைப்பட விருது

2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் தற்போது வழங்கப்படுவதாகக் கூறிய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்திரா, அந்த ஆண்டு, கொவிட் காரணமாக திரைத்துறை பின்னடைவை சந்தித்தது என்றும் ஆனால், இத்துறை விரைவாக முன்னேறி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

Share This Article

Leave a Reply