கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என சசிகலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அரணாக துணை நிற்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களான சேத்தியாதோப்பு, வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே 35 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வரும் சூழலில், அவர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத வகையில் என்.எல்.சி நிர்வாகம் செயல்படவேண்டும். திமுக அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்.எல்.சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழக அரசே விவசாயிகளுக்கு எதிராக நடப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. இதற்காகவா மக்கள் வாக்களித்தனர். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.