நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 720-க்கு 720 என்ற மதிப்பெண் பெற்றவர்கள் 67 பேர். இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு 3 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர், 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் உள்ளிட்ட 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதனால் தான் தற்போது நீட் தேர்வின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 7 பேர் 720-க்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும், தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதனால் தான் நீட் விலக்கே நம் இலக்கு என்று கூறிவருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.