- பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்கொடிப்பாக்கம் கிராமத்தில் பார்த் மைன்ஸ் என்ற நிறுவனம், முரளி என்ற அரசியல் செல்வாக்கு மிக்க நபருடன் இணைந்து கடந்த 2007 ம் ஆண்டு முதல் கல் குவாரிகளை நடத்தி வருகின்றது.
இந்த நிறுவனம் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் பின்பற்றவதில்லை என்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால், நில அதிர்வு, குடியிருப்பு பகுதிகள் மீது கற்கள் விழுவது என பல ஆபத்துக்களை அப்பகுதியினர் சந்தித்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சம்பந்தப்பட்ட கல்குவாரியில் இருந்து வெளிப்படும் மண் துகள்களால் விழுப்புரம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் காற்று, நீர் நிலைகள் மாசடைந்திருப்பதாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே தென்கோடிப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மைன்ஸ் கல்குவாரி நிறுவனத்தை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜகுரு ஆஜராகி, பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் இந்த கல் குவாரிகள் விதிகளை மீறி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக, தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் காவல்துறை எஸ்.பி ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.