- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் வனிதா வழக்கு 2 வாரம் தள்ளிவைப்பு.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால், காவல் துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண்ணின் தாய் தாக்கல் செய்த வழக்கு செல்லத்தக்கதல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.
ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில், காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அரசு, யார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கவில்லை எனவும், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து பதில்மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் காவல் துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும், குற்ற நடவடிக்கை தொடர்பாக மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, மனுவில் எழுப்பப்பட்ட மற்ற கோரிக்கைகள் தொடர்பாக கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.