அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!

2 Min Read
  • அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சட்டத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்த பதில்மனுவை ஆய்வு செய்த நீதிபதி, அரசு சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்துள்ளார். காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு முறையான சட்டக் கல்வி வழங்க முடியும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இது சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்பும் எதிர்கால தலைமுறையை அழித்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லது என காட்டமாக தெரிவித்த நீதிபதி, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் எனவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்சம் இதையும் படிங்க :   http://thenewscollect.com/protest-demonstration-and-road-blockade-by-tamil-nadu-cauvery-farmers-association/

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

Share This Article

Leave a Reply