வில்லியனூர் அருகே இருந்ததாக நினைத்தவர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர் அருகே உள்ள சேந்தநந்தம் மகாலட்சுமி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் வயது 37. இவரது மனைவி சுதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் பத்துக் கண்ணு சாலையில் தனியார் பார் எதிரே வாய்க்காலில் விழுந்து ஒருவர் இறந்து கிடப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாய்க்காலில் இருந்த உடலை எடுத்து சாலையில் வைத்தனர். அவ்வழியாக சென்றவர் இறந்தவர் மகாலட்சுமி நகரை சேர்ந்த சுரேஷ் என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து கிராமத்தை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருந்தது சுரேஷ் தான், என உறுதி செய்து வேலைக்குச் சென்ற மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சுரேஷின் மனைவி சுதா மற்றும் உறவினர்கள் இறந்து கிடந்தவர் உடலை பார்த்து சாலையில் விழுந்து புரண்டு அழுதனர். மேலும் போலீஸ் இறந்தவர் உடலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் கொடுக்க மனைவி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் காவல் நிலையம் சென்றனர். சுதாவிடம் புகார் பெற்றுக் கொண்டிருந்த போது இறந்த சுரேஷின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கேட்டனர்.

அதன் பேரில் அவரது உறவினர்கள் ஆதார் அட்டை எடுக்க வீட்டுக்குச் சென்ற போது சுரேஷ் படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து செல்போன் மூலம் சுதாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காவல் நிலையத்தில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் அதனை கேட்டு ஆச்சரியமடைந்து சுரேஷை அழைத்து வருமாறு கூறினார். இறந்ததாக நினைத்தவர் உயிருடன் வந்தது கண்டு மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து இறந்தவர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.