அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை கட்டிட வேலை பார்க்க வைக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் வளர்ச்சி குழுவினர் செயலால் அதிர்ந்து போன பெற்றோர்கள்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் கட்டிட வேலை பார்க்கும் பள்ளி மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை மாணவர்கள் 47 பேரும் மாணவிகள் 37 பேரும் ஆக மொத்தம் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் 5 – 10 வரையிலான வகுப்புகளுக்கும் மூன்று வகுப்பறை கட்டிடம் மட்டுமே இருந்ததால், தற்போது இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிதி முழுவதையும் பள்ளியின் முன்னாள் மாணவர் அருள் சூசை என்பவர் மொத்தமாக வழங்கி உதவியுள்ளார்.
இதற்காக வழங்கப்பட்ட நிதியினை பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் உள்ள குழுவினருடன் தலைமையாசிரியரும் சேர்ந்து சொந்தமாக வேலைக்கு, நாள்சம்பளத்தில் ஆட்கள் வைத்து தாங்களே முன் நின்று, இந்த கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த கட்டிட பணிகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் மூலம் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் கடப்பாறை எடுத்து குழி தோண்டுவது, செங்கல் உடைப்பது, செங்கல் சுமப்பது , சாந்து சட்டி மூலம் மண் சுமப்பது, இரும்பு கம்பிகளுக்கு வர்ணம் அடிப்பது, கட்டிடத்திற்கு மேல் நின்று ஆபத்தான நிலையில் மிகவும் சிறியவர்கள் தண்ணீர் பிடிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் மாணவர்களை சித்தாளு போன்றும் தலைமை ஆசிரியர் சரவணன் ஒரு மேஸ்திரி போலவும் செயல்பட்டு மாணவர்களிடம் வேலை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் வேலை செய்த வீடியோ வெளியாகி மாணவர்களின் பெற்றோர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் படிக்க அனுப்பும் மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து , கட்டிட பணிகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி வளர்ச்சி குழுவினர் மீது பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.